ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆனால், சாய்னா காலிறுதியிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

சாய்னா காலிறுதியில் வென்றிருந்தால், அரையிறுதியில் சாய்னாவ்வும், சிந்துவும் மோதியிருப்பர்.

ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பி.வி.சிந்து கடும் போராட்டத்துக்குப் பிறகு 21-17, 21-23, 21-18 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஜியாவ் லியாங்கை தோற்கடித்தார்.

மற்றொரு காலிறுதியில் சாய்னா 8-21, 21-18, 19-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் சியூங் இயிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஒருவேளை இந்த ஆட்டத்தில் சாய்னா வென்றிருந்தால், அரையிறுதியில் சிந்துவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.

சர்வதேச போட்டியில் சாய்னாவும், சிந்துவும் இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளனர். 2014-இல் நடைபெற்ற இந்திய கிராண்ட்ப்ரீ போட்டியில் மோதினார்கள். அதில் சாய்னா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் சமீர் வர்மா 21-17, 23-21 என்ற நேர் செட்களில் மலேசியாவின் சாங் வெய் பெங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான அஜய் ஜெயராம் 15-21, 14-21 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் லாங் ஆக்னஸிடம் தோல்வி கண்டார்.