உள்ளூர் போட்டி ஒன்றில் அதிவேக சதத்தை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் சஹா.

கொல்கத்தாவில் ஜே.சி.பானர்ஜி டி20 கோப்பைக்கான தொடர் நடந்துவருகிறது. இதில் மோகன் பாகன் அணிக்காக சஹா ஆடிவருகிறார். இத்தொடரின் ஒரு போட்டியில் மோகன் பாகன் மற்றும் பி.என்.ஆர்.ரீ கிரியேஷன் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பி.என்.ஆர்.ரீ கிரியேஷன் அணி 20 ஓவருக்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மோகன் பாகன் அணியின் தொடக்க வீரரான சஹா, சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கினார்.

அடுத்த பந்துகளை சிக்ஸரும் பவுண்டரியுமாக பறக்கவிட வெறும் 20 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 7 ஓவரில் இலக்கை எட்டி அந்த அணி வெற்றி பெற்றது. இதுவரை எந்த விதமான போட்டியிலும் நிகழ்த்தப்படாத சாதனை இது.

சர்வதேச கிரிக்கெட்டில் 31 பந்துகளில் டிவில்லியர்ஸ் அடித்த சதமே அதிவேக சதமாக உள்ளது.

சஹா, அடித்தது உள்ளூர் போட்டியாக இருந்தாலும் கூட, அந்த தரத்திலான போட்டியில் கூட யாரும் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை. சஹாவின் அதிரடி சதத்தால், அவரை இந்த ஐபிஎல் தொடருக்கு ஏலத்தில் எடுத்துள்ள ஹைதராபாத் அணியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.