sachin tendulkar advice to defeat south africa

தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த இந்திய அணிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மூன்று ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய தொடர்களில் விளையாடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.

கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்தனர். ஆனால், பேட்ஸ்மேன்களின் சொதப்பலால், தோல்வியடைந்தோம். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 400 ரன்களைக் கூட இந்திய அணி எடுக்கவில்லை. 

208 என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்க உள்ளது.

தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால், இரு அணிகளும் வெற்றிபெற கடுமையாக போராடும். தென்னாப்பிரிக்க மண்ணில், அந்த அணியை வீழ்த்த சச்சின் டெண்டுல்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சச்சின் அளித்த பேட்டியில், தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை முதல் 25 ஓவர்கள் பவுலர்களுக்கானது. அந்த ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் மிகக்கவனமாக ஆட வேண்டும். அப்படி ஆடிவிட்டால், 50 முதல் 80 ஓவர்கள் வரை ரன்களை குவிக்கலாம். ஆனால், முதல் 25 ஓவர்களில் கவனமாக விளையாட வேண்டும். 

அடுத்தது, பவுலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இவையனைத்தையும் விட அணியாக நேர்மறையான எண்ணத்துடன் வெற்றியை அடைய விளையாட வேண்டும் என சச்சின் ஆலோசனை கூறியுள்ளார்.