தன்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கி வளர்த்தெடுத்த தனது பயிற்சியாளருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்றார் சச்சின் டெண்டுல்கர்.

கிரிக்கெட் என்றாலே உலகளவில் அனைவருக்குமே சட்டென நினைவுக்கு வரக்கூடிய பெயர்களில் முதன்மையானது சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டு அனைத்து காலத்திலும் சிறந்த வீரராக திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர். 

சாதனைகளின் நாயகனும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கரை சிறு வயதிலிருந்தே உருவாக்கி வளர்த்தெடுத்தவர் ராமகாந்த் அச்ரேக்கர். சிறு வயதிலிருந்தே சச்சினை உருவாக்கியது அவர் தான். அச்ரேக்கர் - சச்சின் இடையேயான குரு - சிஷ்யன் உறவு அருமையானது. 

சச்சினின் ஆஸ்தான குருவான அச்ரேக்கர், ஜனவரி 2 புதன்கிழமை உயிரிழந்தார். 87 வயதான அச்ரேக்கர், வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. அப்போது தன்னை உருவாக்கி வளர்த்தெடுத்த குருவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அச்ரேக்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்றார் சச்சின் டெண்டுல்கர். 

குருவிற்கு சச்சின் டெண்டுல்கர் செலுத்திய மரியாதை ரசிகர்களுக்கு அவர் மீதான மதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. அச்ரேக்கர், சச்சின் டெண்டுல்கரை மட்டுமல்லாது வினோத் காம்ப்ளி, அகார்கர் போன்ற பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.