Rupinder Paul Singh returned to the team after six months after winning the Hockey World League match.
காயம் காரணமாக ஆறு மாதங்கள் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்த ரூபிந்தர் பால் சிங், ஹாக்கி உலக லீக் போட்டியின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
வலதுகால் தொடைப் பகுதி காயம் காரணமாக சுமார் ஆறு மாதங்கள் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்த ரூபிந்தர் பால், வலைகோல் பந்தாட்டத்தின் உலக லீக் போட்டியின் மூலம் அணிக்கு திரும்பியுள்ளார்.
டிராக் ஃபிளிக்கரான ரூபிந்தர், இந்தியாவின் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான சிறப்பாக விளையாடி இரண்டு கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற இருக்கும் ஹாக்கி உலக லீக் போட்டியில் 'பி' பிரிவில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், அவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டியில், “இது எனக்கு ஒரு புதிய தொடக்கத்தைப் போன்றது. சிறிது இடைவெளிக்குப் பிறகு விளையாட உள்ளதால், களத்தில் துடிப்புடன் செயல்பட விரும்புகிறேன். காயத்தினால் ஓய்வில் இருந்தபோது அதிகம் கற்றுக் கொண்டேன். அதில் முக்கியமான ஒன்று ஆட்டத்தை முழுமையாக உணருவதாகும்.
அதற்கான சரியான தருணத்துக்காக காத்திருந்தேன். தற்போது இந்தப் போட்டியின் மூலம் அதை செயல்படுத்த விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் தடுப்பாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க எண்ணுகிறேன். இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது பெனால்டி கார்னர்களை நம்மால் சரியாக எதிர்கொள்ள இயலவில்லை.
தடுப்பாட்டத்தை முறையாக கையாண்டாலே வெற்றி பெறலாம். அதற்கு பின்கள வீரர்கள் மட்டும் சரியாக செயல்பட்டால் போதாது. அனைத்து வீரர்களும் அதே பொறுப்புடன் விளையாட வேண்டும். ஆர்ஜென்டீனா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டங்கள், அணியினரை போட்டியின் தன்மைக்கு கொண்டு வந்துள்ளன.
எங்களுக்கு பின்னடைவாக இருக்கும் சில விஷயங்களை மேம்படுத்திக் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்துக்கு தயாராகி வருகிறோம்” என்று ரூபிந்தர் பால் சிங் கூறினார்.
