Ronaldinho retires in international football game

பிரேஸில் கால்பந்து வீரரான ரொனால்டினோ சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்றும் இனி அவர் விளையாட மாட்டார் என்று அவரது சகோதரரும், அவரது முகவருமான ராபர்டோ அசிஸ் தெரிவித்தார்.

பிரேஸிலில் தனது சொந்த ஊரான போர்டோ அலெக்ரேவில் கிரேமியோ கால்பந்து கிளப் அணியிலிருந்து தனது ஆட்டத்தை தொடங்கினார் ரொனால்டினோ (37).

கடந்த 2002-ஆம் ஆண்டு பிரேஸில் அணி உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ரொனால்டினோ.

2003-08 காலகட்டத்தில் பார்சிலோனா அணியில் இருந்த ரொனால்டினோ, 2006-இல் அந்த அணி சாம்பியன்ஸ் லீக் பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்தார். அத்துடன், 2005-இல் பேலன் தோர் விருது வென்றார்.

இது தவிர ஐரோப்பா, மெக்ஸிகோவில் இதர கிளப் அணிகளுக்காகவும் ஆடியுள்ள ரொனால்டினோ, பிரேஸில் அணிக்காக 97 முறை களம் கண்டு, 33 கோல்கள் அடித்துள்ளார்.

பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன், பார்சிலோனா ஆகிய கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ரொனால்டினோ தற்போது ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ரொனால்டினோவின் சகோதரரும், அவரது முகவருமான ராபர்டோ அசிஸ், "ரொனால்டினோ இனி கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார். ரஷியாவில் வரும் ஆக்ஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குப் பிறகு பிரேஸில், ஐரோப்பா, ஆசியாவில் கால்பந்து சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.