இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளதை ரோஹித் சர்மாவின் சமீபத்திய செயல் அம்பலப்படுத்தியுள்ளது. 

கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு அணியில் டாப் 2 இடங்களில் இருக்கும் வீரர்களுக்கு இடையே பனிப்போர் நடப்பது வழக்கம். அந்த வகையில், கோலிக்கும் ரோஹித்துக்கும் அப்படியான பனிப்போர் நடந்துவந்திருக்கலாம் என்பது ரோஹித்தின் தற்போதைய செயலின் மூலம் அறியமுடிகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதை அடுத்து, தன்னை ஓபனிங் ஆட அழைத்தால், தொடக்க வீரராக களமிறங்க தயார் என ரோஹித் தெரிவித்திருந்தார். எனினும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். 

இது ரோஹித்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். இதற்கிடையே, ரோஹித்தை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோலி வேண்டுமென்றே ஒதுக்குவதாகவும் ரோஹித்தை கண்டு கோலி பயப்படுவதாகவும் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், விரைவில் தொடங்க உள்ள ஆசிய கோப்பையில் ஆடுவதலிருந்து கோலிக்கு ஓய்வு விடுக்கப்பட்டுள்ளது. கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், விராட் கோலியை டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளார் ரோஹித் சர்மா. டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இதுவரை கோலியை பின் தொடர்ந்துவந்த ரோஹித் சர்மா, திடீரென அன்ஃபாலோ செய்ததோடு, நட்பு வட்டாரத்திலிருந்து கோலியை நீக்கியுள்ளார். மேலும் கோலியை விமர்சனம் செய்து ரசிகர்கள் பதிவிட்டுள்ளதையும் ரோஹித் சர்மா லைக் செய்துள்ளார். இதனால் ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

ரோஹித் சர்மாவின் செயல், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரோஹித் சர்மாவின் செயல் முதிர்ச்சியற்றது என ஹர்ஷா போக்ளே விமர்சித்துள்ளார். ரோஹித் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பல டுவீட்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.