நிதாஹஸ் கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டி, கொழும்புவில் நேற்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து திரில்லர் வெற்றியை தேடி தந்தார் தினேஷ் கார்த்திக். தோல்வியின் விளிம்பிலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து வெல்ல வைத்தார் தினேஷ் கார்த்திக்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர். எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார். எந்த பேட்டிங் வரிசையில் அவரை பேட்டிங் செய்ய அழைத்தாலும் அந்த இடத்தில் களமிறங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதுபோன்ற வீரர்தான் அணிக்கு அவசியம்.

3வது வரிசையில் இறங்க தினேஷ் கார்த்தி விரும்பவில்லை:

3-வது வரிசையில் களமிறங்க விருப்பமில்லை என்று என்னிடம் தினேஷ் தெரிவித்தார். அவரின் முடிவை மதித்து 7-வது வீரராக களமிறக்கினேன். அவரின் அனுபவமும், திறமையும் இக்கட்டான நேரத்தில் அணியை தூக்கி நிறுத்தவும், வெற்றியடையவும் உதவியது. 

தினேஷ் கார்த்திக் வருத்தம்:

நான் ஆட்டமிழந்ததும், தினேஷ் கார்த்திக் களமிறங்க தயாரானார். ஆனால், கொஞ்சம் பொறுமையாக இருங்கள். 7-வது வீரராக களமிறங்கலாம் என்று கூறினேன். உடனே அவர் சிறிது வேதனைப்பட்டார். நீங்கள் 7-வது வீரராக களமிறங்கி ஆட்டத்தைவெற்றிகரமாக முடித்துவைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்களிடம் இருக்கும் அத்தனை திறமையையும், கடைசி 3 ஓவர்களில் பயன்படுத்துங்கள் என்றேன். அதனால்தான் அவர் 7-வது வீரராக களமிறங்கினார். ஆனால், நான் சொன்னதை போலவே ஆட்டத்தை வெற்றிகரமாக தினேஷ் முடித்துவைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. 

தினேஷின் அனுபவம் தேவைப்பட்டது:

வங்கதேசத்தைப் பொறுத்தவரை, கடைசி ஓவர்களில் அனுபவம் நிறைந்த ருபெல் ஹூசைன், முஸ்தாபிகூர் ரஹ்மான் ஆகியோரே பந்துவீசுவார்கள் என்பது தெரியும். அதை எதிர்கொள்ள அனுபவம் நிறைந்த வீரர் தேவை என்பதால், தினேஷ் கார்த்திக் 7வதாக களமிறக்கப்பட்டார். வங்கதேச பந்துவீச்சாளர்கள் வீசும் ‘ஆஃப் கட்டர்களை’ சிறப்பாக எதிர்கொள்ள தினேஷ் கார்த்திக்கால் மட்டுமே முடியும். அதனால்தான் 7வது இடத்தில் களமிறக்கப்பட்டதாக ரோஹித் தெரிவித்துள்ளார்.