நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4-1 என ஒருநாள் தொடரை வென்றது. நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டெழுந்து ஒரு அணியாக சிறப்பாக ஆடி கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 

வெலிங்டனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 18 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், ராயுடு - விஜய் சங்கர் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது. விஜய் சங்கர் 45 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராயுடு, 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கேதர் ஜாதவும் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி தன் பங்கிற்கு 34 ரன்களை எடுத்து கொடுத்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா, இந்திய அணி 252 ரன்களை எட்ட உதவினார். 

253 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்துவிட்டது. ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே நிகோல்ஸை 8 ரன்களில் வெளியேற்றிய ஷமி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்த கோலின் முன்ரோவை 24 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து களத்திற்கு வந்த டெய்லரை தனது முதல் ஓவரிலேயே அவுட்டாக்கினார் ஹர்திக் பாண்டியா. 38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நியூசிலாந்து அணியை வில்லியம்சன் - லதாம் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் இந்த ஜோடியை பிரித்து பிரேக் கொடுத்தார் கேதர் ஜாதவ். வில்லியம்சனின் விக்கெட்டை கேதர் வீழ்த்த, அதன்பிறகு டாம் லதாம் மற்றும் கோலின் டி கிராண்ட்ஹோம் ஆகிய இருவரையும் சாஹல் வீழ்த்தினார். 

இதையடுத்து போட்டி இந்திய அணிக்கு சாதகமாக திரும்பிய நிலையில், ஜேம்ஸ் நீஷம் அதிரடியாக ஆடி சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி, மீண்டும் போட்டியை இந்திய அணியிடமிருந்து எடுத்து சென்றார். புவனேஷ்வர் குமார் வீசிய 36வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசினார். 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் அதிரடியாக ஆடி இந்திய அணியை மிரட்டிவந்த நீஷமை, தோனி ரன் அவுட் செய்தார். இந்த விக்கெட்டுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. நீஷமின் விக்கெட்டுக்கு பிறகு போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியதோடு, அதற்கடுத்த விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தி இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஹாமில்டன் போட்டியில் நாங்கள் தோற்ற விதம் மிகவும் மோசமானது. அந்த தோல்விக்கு பிறகு ஒரு அணியாக நாங்கள் மீண்டெழ வேண்டும் என்று டாஸ் போடும்போதே கூறியிருந்தேன். அதை செய்திருக்கிறோம். 4 விக்கெட்டுகள் விரைவில் விழுந்துவிட்டது. எனினும் அந்த இக்கட்டான சூழலில் ராயுடுவும் விஜய் சங்கரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பின்னர் ஹர்திக்கும் கேதர் ஜாதவும் ஆடிய விதம் அபாரமானது. 250 ரன்கள் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் தான். இக்கட்டான பல தருணங்களில் பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேக் கொடுத்தனர். போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால், அணியின் சரியான பேலன்ஸை கண்டறிய வேண்டும். சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியை வீழ்த்து வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்தவகையில், நாங்கள் பெற்றிருக்கும் வெற்றி மிகப்பெரிய சாதனைதான் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.