Rohit Sharma is half the wage this time remaining fine

புணே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

புணே – மும்பை அணிகளுக்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது முதலில் பேட் செய்த புணே, 160 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய மும்பை அணி 19-ஆவது ஓவர் இறுதியில் 144 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அந்த அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஜெயதேவ் உனத்கட் வீசிய அந்த ஓவரை, மும்பை கேப்டன் ரோஹித் சர்மா எதிர்கொண்டார்.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அது அகலப்பந்தாக (வைடு) செல்லும் என்று கணித்த ரோஹித், அதை அடிக்காமல் தவிர்த்தார். ஆனால், அந்தப் பந்தை வைடாக நடுவர் எஸ்.ரவி அறிவிக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த ரோஹித் சர்மா, நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மற்றொரு நடுவர் வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் மும்பை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் அந்தச் செயல் ஐபிஎல் விதிகளின்படி லெவல் 1 குற்றம் என்றும், இந்த சீசனில் அவர் இரண்டாவது முறையாக இந்தக் குற்றத்தில் ஈடுபடுவதாகவும், இதனால் அவரது ஆட்டத்துக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் அறிக்கை வெளியிட்டுள்ளது.