வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதம் விளாசி ஆடிவருகிறார். 

இந்தியா  - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்துவரும் நான்காவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சிறப்பாக தொடங்கினர். எனினும் அது நீடிக்கவில்லை. 40 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் தவான், கீமோ பாலின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இந்திய அணியின் கேப்டனும் ரன் மெஷினுமான விராட் கோலி, 16 ரன்களில் ரோச்சின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோஹித்துடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் அவ்வப்போது பவுண்டரிகளையும் விளாசி ரன்களை சேர்த்துவருகிறது. 

சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 21வது சதத்தை பூர்த்தி செய்தார். சதமடித்த பிறகும் ரோஹித் சர்மா நிதானமாகவே ஆடிவருகிறார். 33 ஓவருக்கே இந்திய அணி 200 ரன்களை கடந்துவிட்டது; ரோஹித்தும் சதமடித்துவிட்டார். 

ரோஹித்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து ராயுடுவும் சிறப்பாக ஆடிவருகிறார். ராயுடு அரைசதம் கடந்துவிட்டார். ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால் பின்னர் அவரை வீழ்த்துவது என்பது கடினம். அதனால்தான் நிதானமாக தொடங்கி நேரம் எடுத்து சதம் விளாசினாலும், மூன்று இரட்டை சதங்களை அவரால் அடிக்க முடிந்தது. தொடக்கத்திலேயே ரோஹித்தை வீழ்த்தாவிட்டால் எதிரணிக்கு ஆபத்து. அதுவும் அவர் சதமடித்துவிட்டால் அவ்வளவுதான்; சொல்லவே தேவையில்லை. இன்றைய போட்டியில் 35 ஓவருக்கு உள்ளாகவே சதத்தை பூர்த்தி செய்துவிட்டார். எனவே இன்னிங்ஸின் கடைசி நேரத்தில் அடித்து நொறுக்கி அடுத்த இரட்டை சதம் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி மிரண்டுதான் போயுள்ளது.