தென் ஆப்பிரிக்காவிற்கு இந்திய அணி செல்வது, அந்த அணியை வெல்வதற்கே தவிர தோற்பதற்கோ டிரா செய்வதற்கோ அல்ல அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா காட்டமாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மீண்டும் இலங்கை என தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றியை பதிவு செய்துவருகிறது. ரோஹித் சர்மா, ஷிகர் தவன், கோலி ஆகியோர் பேட்டிங்கிலும் புவனேஷ்வர்குமார், பும்ரா, சாஹல், குல்தீப் ஆகியோர் பவுலிங்கிலும் செம ஃபார்மில் உள்ளனர்.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவோ பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே மிரட்டி வருகிறார்.

தற்போதைய இந்திய அணி, வலுவான அணியாக திகழ்கிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு சவாலானதாக கருதப்படுகிறது. தென்னாப்பிரிக்க மண்ணில், அந்த அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைக்கும் என டிராவிட் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை டிரா செய்யவே இந்தியா போராட வேண்டியிருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இப்படியாக பலதரப்பட்ட கருத்துகள் உலாவருகின்றன.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க தொடர் குறித்து பேசிய ரோஹித் சர்மா, தற்போதைய இந்திய அணி மிகவும் வலுவான அணியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடி, தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. எந்த அணியாக இருந்தாலும், தற்போதைய இந்திய அணியை வீழ்த்துவது கடினம். தென்னாப்பிரிக்காவுக்கு செல்வது, அந்த அணியை வெல்வதற்கே தவிர, டிரா செய்ய கிடையாது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.