ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, முரளி விஜய் உள்ளிட்ட மூன்று வீரர்களுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆடிய டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மாவிற்கு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து தொடரில் ராகுல், தவான், முரளி விஜய் ஆகியோர் சொதப்பியதை அடுத்து மீண்டும் ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. 

ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சொதப்பும் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் தொடக்கத்தில் சொதப்புகிறது. டெஸ்ட் அணிக்கு சரியான தொடக்க இணை அமையவில்லை. இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள முரளி விஜய், இங்கிலாந்து தொடரில் சரியாக ஆடவில்லை என்பதற்காக பாதியில் நீக்கப்பட்டார். 

அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இளம் வீரர் பிரித்வி ஷா அருமையாக ஆடியதை அடுத்து அவர் நிரந்தரமாக டெஸ்ட் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் மயன்க் அகர்வாலும் தொடர்ந்து சிறப்பாக ஆடி திறமையை நிரூபித்துவருவதால், அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்பதால் இனிமேல் முரளி விஜய்க்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று பேசப்பட்டது. 

அதேபோல விக்கெட் கீப்பிங்கை பொறுத்தமட்டில் இளம் வீரர் ரிஷப் பண்ட் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடினார். எனினும் அவரது விக்கெட் கீப்பிங் டெக்னிக் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, முரளி விஜய் ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலும் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்; மேலும் பந்து நன்றாக பவுன்சாகும் என்பதால், அந்த சூழலில் ரோஹித் சர்மா அசத்துவார் என்ற காரணத்தால் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆடிவிட்டால், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் நிரந்தர தொடக்க வீரராக இருக்கும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியிலும் அந்த இடத்தை பிடித்துவிடுவார். ஆனால் ரோஹித் சர்மா ஓபனராக இறக்கப்படுவாரா அல்லது மிடில் ஆர்டரில் இறக்கப்படுவாரா என்பது தெரியவில்லை. 

மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சரியாக ஆடாவிட்டாலும் இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகளில் முரளி விஜய் சிறப்பாக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹனுமா விஹாரி, குல்தீப், ரிஷப் பண்ட் ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ராகுல், பிரித்வி ஷா, முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷமி.