நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கி போட்டி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களத்திற்கு வந்த தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே சுதாரிப்பாக ஆடினர். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய ரோஹித் - தவான் ஜோடி, ரன்களை குவிக்கவும் தவறவில்லை. 

இருவரும் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்துவந்தனர். 45 ரன்களில் இருந்த ரோஹித் சர்மா, சிக்ஸர் விளாசி அரைசதம் விளாச, அவரை தொடர்ந்து தவானும் அரைசதம் அடித்தார். அதன்பிறகும் இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்திக்கொண்டே இருந்தனர். 

முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் நியூசிலாந்து பவுலர்கள் திணறினர். போராடி ஒருவழியாக ஷிகர் தவானை 66 ரன்களில் வெளியேற்றினார் டிரெண்ட் போல்ட். ரோஹித் - தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 154 ரன்களை குவித்தது. 

தவான் அவுட்டானாலும் மறுமுனையில் தொடர்ந்து ஆடிவரும் ரோஹித் சர்மா, 90 ரன்களை நெருங்கிவிட்டார். ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில், ரோஹித் சர்மாவும் சதமடித்துவிட்டால் இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டுவது உறுதி.