வங்கதேசத்துக்கு எதிரான டி20 முத்தரப்பு இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்கமாட்டார் என்று நினைத்து தான் சூப்பர் ஓவருக்கு தயாரானதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் மிரட்டலான ஆட்டத்தால், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில்லர் வெற்றி பெற்றது. 

இரண்டு ஓவருக்கு 34 ரன்கள் என்ற இக்கட்டான நிலை இருந்தது. 19வது ஓவரில் 22 ரன்கள் குவித்தார் தினேஷ் கார்த்திக். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது, வங்கதேசத்துக்கு எதிரான இலங்கை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் தினேஷ் கார்த்திக்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, தினேஷ் சந்தித்த கடைசிப் பந்தை எல்லோரும் பார்க்க ஆர்வமாக இருந்தபோது நான் மட்டும் அந்த இடத்தில் இல்லை. கடைசிப் பந்தில் எப்படியும் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்கமாட்டார்; ஆனால் பவுண்டரி அடித்து விடுவார் என நினைத்தேன். அதனால், சூப்பர் ஓவர் வரும் என்பதால் அதற்கு தயாராக வேண்டும் என்று எண்ணினேன். அதனால், ஓய்வறைக்குச் சென்று என்னுடைய கால்காப்புகளைக் கட்டுவதில் மும்முரமாக இருந்தேன்.

ஆனால், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்த செய்தி கிடைத்ததும் நான் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றேன். அவரின் உண்மையான சக்தியையும், திறமையையும் வெளிப்படுத்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் தினேஷ் கார்த்திக் திறமையுள்ளவர் என்று நம்பியே அவரை 7-ம் வீரராக களம் இறக்கினேன். அதை நிறைவேற்றிக்கொடுத்துவிட்டார் என ரோஹித் தெரிவித்துள்ளார்.