ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 14-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் ராபர்ட்டோ அகட், உலகின் 48-ஆம் நிலை வீரரான குரோஷியாவின் போர்னா கோரிச் ஆகியோர் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் அகட், தொடர்ந்து 5-வது முறையாக பங்கேற்கிறார். அவர், இப்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் சென்னை ஓபனில் சிலிச்சுக்கு சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டில் அகட் இரு சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

சென்னை ஓபனில் பங்கேற்பது குறித்து அகட் கூறுகையில், "சென்னை ஓபனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சீசனை சிறப்பாக தொடங்குவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தற்போது தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கிறேன். விரைவில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேற முயற்சிப்பேன். சென்னை ஓபனில் எனது முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என நம்புகிறேன். இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கு சென்னை ஓபன் சரியான அடித்தளமாகவும், பயிற்சிப் போட்டியாகவும் இருக்கும்' என்றார்.

20 வயதான போர்னா கோரிச், சென்னை ஓபனில் பங்கேற்பது குறித்து கூறியதாவது: கடந்த ஆண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறினேன். அதனால் இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. சென்னை ஓபன் மூலம் எனது முதல் ஏடிபி சாம்பியன் பட்டத்தை வெல்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.