ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பந்துவீசிய விராட் கோலி, சதமடித்த வீரரின் விக்கெட்டை வீழ்த்தி மிரட்டினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்குமே ஒவ்வொரு வகையில் முக்கியமான தொடர் என்பதால் இரு அணிகளுமே தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளன. 

ஆஸ்திரேலிய சூழலுக்கு இந்திய அணி தயாராகும் விதமாக ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் பயிற்சி போட்டியில் ஆடியது. அந்த போட்டியில் வழக்கம்போலவே முன்வரிசை வீரர்களின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திவிட்ட இந்திய பவுலர்கள், பின்வரிசை வீரர்களை வீழ்த்த முடியாமல் திணறினர். அந்த போட்டியில் அபாரமாக ஆடிய நீல்சன் சதமடித்தார். எந்த இந்திய பவுலராலும் வீழ்த்த முடியாத அந்த விக்கெட்டை விராட் கோலி வீழ்த்தி மிரட்டினார். 7 ஓவர்களை வீசி 27 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் விராட் கோலி.

தான் விக்கெட் வீழ்த்தியதை நினைத்து தானே வியந்துபோன கோலி, பயங்கரமாக சிரித்தார். கோலி பந்துவீச செல்வதற்கு முன், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம், வேண்டாம் அப்படியே நில் என்று கூறுவதுபோல் சைகை காட்டினார். கோலியின் செய்கையிலிருந்து, ரிஷப் பண்ட் என்ன கேட்டிருப்பார் என்பதை அனுமானிக்கலாம். அதாவது ஸ்டம்புக்கு அருகில் நின்ற ரிஷப், நீங்கள் ஸ்பீடு பவுலிங் போட போகிறீர்களா? அல்லது ஸ்பின்னா? என கேட்டிருக்கலாம். அதற்குத்தான் கோலி, வேண்டாம் அங்கேயே நில் என்று சொல்லியிருப்பார். 

ஒருவேளை அப்படி கீப்பிங் நிற்பதற்காக கேட்டிருந்தாலும், அந்த கேள்வி கொஞ்சம் நக்கலான கேள்விதான். ஏனென்றால் ஸ்பீடோ ஸ்பின்னோ கோலி போடும் பந்து ஒன்றும் 140 கிமீ வேகத்தில் வரப்போவதில்லையே..