உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.ரிசர்வ் தொடக்க வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையே இருந்தது. அதிலும் ரிசர்வ் தொடக்க வீரர் தான் கேஎல் ராகுல் தான் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் எடுத்து உறுதி செய்துவிட்டது. 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களில் ஒருநாள் தொடரில் புறக்கணிக்கப்பட்ட ரிஷப் பண்ட், இந்த தொடரில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இதன்மூலம் உலக கோப்பையில் ரிஷப் பண்ட் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் அபாரமாக ஆடினார். 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் இணைந்துள்ளார். குறுகிய காலத்தில் உலக கோப்பையில் ஆடும் அளவிற்கு வளர்ந்துள்ளார் ரிஷப் பண்ட். முன்பைவிட ரிஷப் பண்ட்டின் ஆட்டமும் முதிர்ச்சியடைந்துள்ளதால் உலக கோப்பை அணியில் அவர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. 

இந்நிலையில் தனது பேட்டிங் குறித்து பேசிய ரிஷப் பண்ட், எனக்கு சாதமாக ஒத்துவரும் சில விஷயங்கள் மற்றவர்களுக்கு சரியாக இருக்காது. அதேபோல் மற்றவர்களுக்கு ஒத்துவரும் விஷயங்கள் எனக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது. எனது ஆட்டத்தில்தான் எனது முழு கவனமும் உள்ளது. இப்போதைக்கு ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக கற்றுக்கொண்டேன். அதாவது, எந்த சூழலில் எப்படி ஆட வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். அதேபோல சில நேரங்களில் நமது உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடாது என்பதையும் கற்றுக்கொண்டேன். நானும் ஆடுகிறேன் என்பதுபோல ஆடக்கூடாது. நன்றாக ஆடி ஸ்கோர் செய்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.