இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அவ்வப்போது முக்கியமான கேட்ச்களை விட்டுவிடுவதோடு, சில பந்துகளையும் பிடிக்காமல் விட்டுவிடுகிறார். 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலேயே இவரது விக்கெட் கீப்பிங்கை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை விக்கெட் கீப்பிங் மிகவும் முக்கியம் என்பதால் இவர் விக்கெட் கீப்பிங்கில் தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலும் கேட்ச்களை தவறவிட்டாலும் 11 கேட்ச்களை பிடித்து சாதனையும் படைத்தார். ஒருபுறம் கேட்ச்களை விட்டாலும் மறுபுறம் அதிகமான கேட்ச்களை பிடித்து சாதனையும் படைத்தார். அந்தளவிற்கு அதிகமான கேட்ச்கள் வந்தது, பவுலர்களின் திறமையோடு ரிஷப் பண்ட்டின் அதிர்ஷ்டமும் கூட. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் எளிதான ஒரு கேட்ச்சை கோட்டை விட்டு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். ஷான் மார்ஷ் 24 ரன்கள் இருக்கும்போது ஹனுமா விஹாரியின் பந்தில் கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. எளிமையான அந்த கேட்ச்சை ரிஷப் பண்ட் கோட்டை விட்டார். அதன்பிறகு கூடுதலாக 21 ரன்கள் அடித்து மொத்தம் 45 ரன்கள் அடித்த ஷான் மார்ஷை ஹனுமா விஹாரி வீழ்த்தினார். ரிஷப் பண்ட் கேட்ச்சை விட்டதை அடுத்து அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரித்திமான் சஹாவை டெஸ்ட் அணியில் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். சஹா காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதியை இன்னும் நிரூபிக்காதது குறிப்பிடத்தக்கது.