ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், பயிற்சி போட்டியில் அருமையான ரன் அவுட் ஒன்றை செய்து மிரட்டியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவரது விக்கெட் கீப்பிங் டெக்னிக்கை முன்னாள் விக்கெட் கீப்பர்கள் விமர்சித்தனர். ரிஷப்பும் சரியாக விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. பந்துகளை மிஸ் செய்வது, கேட்ச்சை விடுவது என மோசமாக செயல்பட்டார். 

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை விக்கெட் கீப்பிங் மிக முக்கியம். ஆனால் ரிஷப் பண்ட் அதில் சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அதிகமான ரன்களை விக்கெட் கீப்பிங்கில் கோட்டைவிட்டு வாரி வழங்கினார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பார்த்திவ் படேலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரில் யார் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரிஷப் பண்ட் தான் களமிறக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ரிவியூ கேட்கும் விவகாரத்தில் உறுதியாக இருந்து சரியான முடிவை எடுத்த ரிஷப் பண்ட், அப்போதே தனக்கு தோனியின் இடத்தை நிரப்பும் தகுதியிருக்கிறது என்று உணர்த்தினார். 

இந்நிலையில், பயிற்சி போட்டியில் அற்புதமான ரன் அவுட் ஒன்றையும் செய்துள்ளார். ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய லெவன் அணியின் வீரர் உப்பாலை அருமையாக ரன் அவுட் செய்தார். அந்த அணியின் இன்னிங்ஸில் ஜடேஜா வீசிய 81வது ஓவரின் ஒரு பந்தை அடித்துவிட்டு உப்பால் ஓட, அதை மறுமுனையில் இருந்த கார்டர் கவனிக்கவில்லை. பாதி பிட்ச்சுக்கு ஓடிய பின்னர்தான் கார்டர் கவனிக்காததை கண்ட உப்பால், மீண்டும் திரும்பி ஓடினார். ஆனால் அந்த பந்தை பிடித்து விரைவாக ரிஷப் பண்ட்டிடம் வீசினார் அஷ்வின். அஷ்வின் வீசிய பந்தை நேர்த்தியாக பிடித்து மிகவிரைவாக செயல்பட்டு ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்தார் ரிஷப் பண்ட். நல்ல வேகத்தில் அந்த ரன் அவுட்டை செய்தார் ரிஷப் பண்ட். சற்று தாமதித்திருந்தாலோ, சிறிய தவறு செய்திருந்தாலோ அந்த ரன் அவுட் மிஸ் ஆகியிருக்கும். ஆனால் ரிஷப் பண்ட் அதுபோன்ற எந்த தவறையும் செய்யவில்லை.