ஹைதராபாத்துக்கு எதிராக ரிஷப் பண்ட் அடித்த சதம் சாதனை சதமாக அமைந்தது. 

ஐபிஎல் 11வது சீசன் நடந்துவருகிறது. இந்த சீசனில் பல இளம் வீரர்களின் திறமை இனம் காணப்பட்டுள்ளது. பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், இஷான் கிஷான், மாவி, ராஜ்பூட் போன்ற வீரர்கள் அபார ஆடிவருகின்றனர்.

இஷான் கிஷான், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் போட்டி போட்டு அடித்து நொறுக்குகின்றனர். கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த போட்டியில் மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 62 ரன்கள் அடித்து மிரட்டினார்.

இந்நிலையில், ஹைதராபாத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில், புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், கௌல் போன்ற சிறந்த பவுலர்களின் பவுலிங்கை பறக்கவிட்டு, சதமடித்தார். 56 பந்துகளில் சதமடித்த ரிஷப், 63 பந்துகளில் 128 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட்டாகவில்லை. 

இந்த சதத்தின் மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் ரிஷப். சேவாக், கைஃப், ஆரோன் ஃபின்ச், அஜீத் அகார்கர், இயன் பிஷப், சுரேஷ் ரெய்னா, ஆகாஷ் சோப்ரா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷா போக்லே உள்ளிட்ட பல கிரிக்கெட்டர்கள் பாராட்டி தள்ளியுள்ளனர்.

ஹைதராபாத்துக்கு எதிராக ரிஷப் பண்ட் அடித்த சதம், சாதனை சதமாக அமைந்துள்ளது. ரிஷப் பண்ட் நேற்று அடித்த 128 ரன்கள் தான், ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் அடித்த அதிக ரன்.

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:

1. ரிஷப் பண்ட் - 128* ரன்கள் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்(2018)

2. முரளி விஜய் - 127 ரன்கள் vs ராஜஸ்தான் ராயல்ஸ்(2010)

3. வீரேந்திர சேவாக் - 122 ரன்கள் vs சென்னை சூப்பர் கிங்ஸ்(2014)

4. வல்லாத்தி - 120* ரன்கள் vs சென்னை சூப்பர் கிங்ஸ்(2011)

அதேபோல், ஹைதராபாத் அணிக்கு எதிராக தனி வீரரின் அதிகபட்ச ரன்னும் ரிஷப் பண்ட்டின் 128 ரன்கள் தான்.

ஹைதராபாத்துக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:

1. ரிஷப் பண்ட் - 128* ரன்கள்(2018)

2. கிறிஸ் கெய்ல் - 104* ரன்கள்(2018)

3. பிரெண்டன் மெக்கல்லம் - 100* ரன்கள்(2015)

இளம் வயதில் ஐபிஎல் சதம்

நேற்றைய ஹைதராபாத் அணிக்கு எதிராக ரிஷப் சதமடித்தபோது, அவருக்கு 20 வயது முடிந்து 218 நாட்கள் ஆனது. இவர்தான் ஐபிஎல்லில் சதமடித்த இரண்டாவது இளம் வீரர். 

19 வயது முடிந்து 253 நாட்கள் ஆகியிருந்த சமயத்தில், 2009ம் ஆண்டு மனீஷ் பாண்டே அடித்தது தான் இளம் வீரரின் ஐபிஎல் சதமாக உள்ளது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் ரிஷப் பண்ட்டும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் முறையே சஞ்சு சாம்சன் மற்றும் டி காக்கும் உள்ளனர்.

இவ்வாறு ரிஷப் பண்ட்டின் சதம், சாதனை சதமாக மாறியது. நல்ல வேளை நமக்கு எதிராக ரிஷப் இப்படி ஆடவில்லை என எதிரணிகள் மனதை தேற்றிக்கொள்ளும் அளவிற்கு ஆடினார் ரிஷப். ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தை கண்டு எதிரணிகள் சற்றே மிரட்சியடைந்துள்ளன.