ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்த ரிஷப் பண்ட், தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சிட்னி டெஸ்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி புஜாரா, ரிஷப் பண்ட்டின் சதங்கள் மற்றும் மயன்க், ஜடேஜாவின் அரைசதங்களால் 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய புஜாரா, இரட்டை சதத்தை தவறவிட்டு 193 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாராவின் இன்னிங்ஸை மறக்கடிக்கும் வகையில் ஆடினார் ரிஷப் பண்ட். அருமையாக ஆடிய அவர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்தார். சதமடித்த பிறகு, ஆஸ்திரேலிய பவுலிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய ரிஷப் பண்ட், 150 ரன்களை கடந்தார். முதல் இன்னிங்ஸில் 159 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்த சதத்தின் மூலம் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக சில சாதனைகளை செய்தார் ரிஷப். ஆஸ்திரேலியாவில் சதமடிக்கும் முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக வேறு எந்த இந்திய விக்கெட் கீப்பரும் ஆஸ்திரேலியாவில் சதமடித்ததில்லை. 

அதேபோல 159 ரன்களை குவித்ததன் மூலம் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியாவிற்கு வெளியே இந்திய விக்கெட் கீப்பரால் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னதாக பாகிஸ்தானில் தோனி அடித்த 148 ரன்கள் தான் இந்திய விக்கெட் கீப்பரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது அதை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.