தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் அந்த அணியும் தொடர் தோல்வியை தழுவிவருவதால், இந்திய அணியை வீழ்த்தி மீண்டெழும் முனைப்பில் உள்ளது. 

எனினும் ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பாதிப்புதான். அதேநேரத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் சிறப்பாக உள்ளது. எனவே இந்திய அணிதான் தொடரை வெல்லும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

ஸ்மித்தும் வார்னரும் இல்லாவிட்டாலும் கூட அந்த அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. மேலும் உஸ்மான் கவாஜா பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆடியதோடு, நல்ல ஃபார்மில் உள்ளார். எனவே அவர் இந்திய அணிக்கு டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல ஆஸ்திரேலிய அணியின் பவுலர்கள் இந்திய அணிக்கு கண்டிப்பாக நெருக்கடி கொடுப்பார்கள்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் மிகச்சிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், அடிலெய்டில் நடக்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் எந்த 11 வீரர்கள் இறங்கினால் சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் ஆரோன் ஃபின்ச்சுடன் மார்கஸ் ஹாரிஸை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லாத மார்கஸ் ஹாரிஸை இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அறிமுகம் செய்து தொடக்க வீரராக களமிறக்கலாம் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கி மிரட்டிய உஸ்மான் கவாஜாவை இந்தியாவுக்கு எதிராக தொடக்க வீரராக களமிறக்குவதை காட்டிலும் மூன்றாவது இடத்தில் இறக்கலாம் என தெரிவித்துள்ளார். 

ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.