reports said rohit sharma lead first twenty over match against ireland
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு தயார்படுத்திக் கொள்ளும் விதமாக கவுண்டி போட்டிகளில் சர்ரே அணிக்காக ஆட இருக்கிறார் கோலி. ஜூன் மாதம் முழுவதும் அங்கு ஆடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் கோலி. அதனால் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து கோலி விலகியதால், ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து டி20 தொடர், இங்கிலாந்து டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகிய போட்டிகளுக்கு வழக்கம்போல கோலி கேப்டனாக செயல்பட உள்ளார். இதில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அயர்லாந்தில் ஜூன் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளுக்கு கோலியை, பிசிசிஐ கேப்டனாக அறிவித்துள்ளது. ஆனால் கவுண்டி போட்டியில் கோலி ஆடும் சர்ரே அணி, ஜூன் 25-28ல் யார்க் ஷயருடன் மோதுகிறது. ஒப்பந்தத்தின்படி அதில் கோலி ஆடியாக வேண்டும். அப்படியிருக்கையில், ஜூன் 27 மற்றும் 29ம் தேதிகளில் நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் எப்படி கோலி ஆட முடியும் என்ற கேள்வி எழுந்தது.
ஒரே நேரத்தில் இரண்டு இடங்களிலும் எப்படி ஆட முடியும் என்ற கேள்வியும் விவாதமும் எழுந்தது. அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டிக்கு ரோஹித் கேப்டனாகவும் இரண்டாவது போட்டிக்கு கோலி கேப்டனாகவும் செயல்படுவார் எனவும் இரண்டு போட்டிகளுக்கும் கேப்டன்களை பிரித்து அறிவித்தால் குழப்பம் ஏற்படும் என்பதால் தான் பொதுவாக கோலியின் பெயர் குறிப்பிடப்பட்டதாகவும் ஆங்கில இணையதளம் தெரிவித்துள்ளது.
அதனால் அயர்லாந்து தொடரில் குழப்பம் இருக்காது. முதல் போட்டிக்கு ரோஹித்தும் இரண்டாவது போட்டிக்கு கோலியும் கேப்டன்களாக செயல்படுவர் என கூறப்படுகிறது. கோலி ஆடாத தருணங்களில், டி20 அணிக்கு ரோஹித் சர்மா ஏற்கனவே கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
