பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே மொஹாலியில் நேற்று நடந்த போட்டியில் அதிவேக அரைசதம் அடித்து கே.எல்.ராகுல் புதிய சாதனை படைத்தார். 

டாஸ் வென்ற அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, கேப்டன் கம்பீரின் அரைசதத்தால் 166 ரன்கள் எடுத்தது. 167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். டெல்லி அணியின் பந்துவீச்சை பறக்கவிட்ட ராகுல், வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் இதுவாகும். இதற்கு முன்னதாக 15 பந்துகளுக்கு யூசுஃப் பதான் அடித்ததே அதிவேக அரைசதமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ராகுல் முறியடித்தார். ராகுலின் அதிரடியால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் பேசிய கே.எல்.ராகுல், கடந்த சில வருடங்களாக  டெஸ்ட் கிரிக்கெட் வீரராக முத்திரை குத்தப்பட்டிருக்கிறேன். அதில் இருந்து விடுபட நினைத்து அடித்து ஆட நினைத்தேன். ரெக்கார்டுகளை உடைத்ததும் சாதனை படைத்ததும் அப்படித்தான். இது போன்றே அடுத்தடுத்த போட்டிகளிலும் ஆட இருக்கிறேன் என தெரிவித்தார்.