ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த்தில் நாளை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பெற்றுள்ளனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்துவரும் நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நாளை தொடங்குகிறது. 

இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா மற்றும அஷ்வின் ஆகிய இருவரையும் காயம் காரணமாக நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் பும்ரா, இஷாந்த், ஷமி ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஆடிய நிலையில், இரண்டாவது போட்டியில் பும்ரா, இஷாந்த், ஷமி ஆகியோருடன் புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் 5 வேகப்பந்து வீச்சாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரியும் உள்ளனர். அஷ்வின் நீக்கப்பட்ட நிலையில், அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். பெர்த் ஆடுகளம் முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு ஆடுகளம். அந்த ஆடுகளத்தில் ஸ்பின் பவுலிங் சுத்தமாக எடுபடாது. எனவே ஸ்பின் பவுலருக்கான அவசியமே அங்கு கிடையாது. நல்ல வேகத்துடன் பவுன்ஸாகும் ஆடுகளம் அது. 

எனவே 7 பேட்ஸ்மேன்கள் மற்றும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது. 7 பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஹனுமா விஹாரி, ஸ்பின் பவுலிங்கும் வீசுவார். எனவே ஸ்பின் பவுலிங்கிற்கு அவர் ஒருவரே போதும் என்பதால் அஷ்வின் நீக்கப்பட்டிருக்கலாம். பும்ரா, இஷாந்த், ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகிய நான்கு பவுலர்களுடன் இந்திய பெர்த்தில் களமிறங்கும் வாய்ப்புள்ளது.