ஆர்சிபி வீரர் டிம் டேவிட் தண்ணீரில் குழந்தைபோல் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இன்று ஐபிஎல் மீண்டும் தொடங்கும் நிலையில், ஆர்சிபி, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன

RCB Tim David playing water: இந்தியா பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கிடையே நேற்று பெங்களூருவில் கனமழை வெளுத்துக் கட்டியது. இதனால் சின்னசாமி மைதானத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

தண்ணீரில் விளையாடிய டிம் டேவிட்

இந்த தண்ணீரில் ஆர்சிபி வீரர் டிம் டேவிட் குழந்தை போன்று ஆட்டம் போட்ட வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அதாவது மைதானத்தில் தேங்கிய மழைநீரில் டிம் டேவிட் குழந்தை போன்று டைவ் அடித்து விளையாடினார். மழைக்குப் பிறகு அவர் தண்ணீரில் உற்சாகமாக விளையாடும் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி, டிம் டேவிட் முழு மழையையும் எப்படி ரசித்தார் என்பதைக் காட்டுகிறது.

டிம் டேவிட் வீடியோ வைரல்

மைதானத்தில் நீந்திய பிறகு, அவர் ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூம்முக்கு செல்கிறார். உள்ளே இருந்த அனைத்து வீரர்களும் அவரை பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். மேலும் டிம் டேவிட்டை கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். டிம் டேவிட் தண்ணீரில் குழந்தைபோல் விளையாடும் வீடியோ ஆர்சிபி அணி நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ஆர்சிபி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஆர்சிபி மேட்ச் வின்னர்

ஐபிஎல் 2025 சீசனில் ஆர்சிபி அணிக்காக பல போட்டிகளில் டிம் டேவிட் மேட்ச் வின்னிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சீசனில் அவர் RCB அணிக்காக 186 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் 193.75 ஆகும். கடைசி 4 ஓவர்களில் களமிறங்கும் அவர் அதிரடியாக விளையாடி போட்டியையே மாற்றி விடுகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடி அணியை பெரிய தோல்வியிலிருந்து காப்பாற்றினார். தோல்விக்குப் பிறகும், டிம் டேவிட்டிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐபிஎல் 2025ல் அசத்தும் ஆர்சிபி

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான டிம் டேவிட்டை ஆர்சிபி அணி மெகா ஏலத்தில் ரூ.3 கோடிக்கு வாங்கியது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் டிம் டேவிட் எதிர்பார்ப்புகளை மீறி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வரவிருக்கும் போட்டிகளிலும் டிம் டேவிட்டிடமிருந்து இதேபோன்ற செயல்திறனை ஆர்சிபி எதிர்பார்க்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.