நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் பிளக்ஸ், பேனருக்கு பாலாபிஷேகம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. 

தங்கள் ஆஸ்தான நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வரும்போதும், அவர்களின் பிறந்தநாளின்போதும் அவர்களின் பிளக்ஸ் மற்றும் பேனர்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்கின்றனர். பேனரில் ஏறி பாலை ஊற்றுவதில் அவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் அது அவர்களின் விருப்பம் என்பதால் அதில் பெரியளவில் தலையிட முடியாது. எனினும் உணவுப் பொருட்களை வீணாக்கும் எந்த செயலையும் ஏற்க முடியாது.

நடிகர்களை இவ்வாறு ரசிகர்கள் பூஜித்துவந்த நிலையில், தற்போது விளையாட்டு வீரர்களின் ரசிகர்களும் இதேபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் ஆர்சிபி அணிக்கு ஆடுவதால் குறிப்பாக பெங்களூருவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். 

ஆர்சிபி அணியின் அடையாளங்களாக விராட் கோலியும் டிவில்லியர்ஸூம் திகழ்கின்றனர். இந்நிலையில், டிவில்லியர்ஸ் தனது 35வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரும் கோலியும் இணைந்து உள்ள பிளக்ஸிற்கு பாலாபிஷேகம் செய்வதாக நினைத்து அந்த பிளக்ஸில் பாலை ஊற்றி கொண்டாடினர் ஆர்சிபி ரசிகர்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.