rcb defeats sunrisers hyderabad and retain play off chance

ஹைதராபாத்தை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது. 

ஐபிஎல் 11வது சீசனின் 51வது லீக் போட்டி பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக கோலியும் பார்த்திவ் படேலும் களமிறங்கினர். பார்த்திவ் படேல் முதல் ஓவரிலேயே 1 ரன்னில் அவுட்டானார். ரஷீத் கான் சுழலில் போல்டாகி கோலியும் 12 ரன்னில் வெளியேறினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸும் மோயின் அலியும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். இருவருமே அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தனர். 39 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து டிவில்லியர்ஸும், 34 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் மோயின் அலியும் அவுட்டாகினர். கடைசி நேரத்தில் கோலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் அதிரடியாக ஆட, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 218 ரன்களை குவித்தது.

219 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் தவான் 18 ரன்களுக்கும் அலெக்ஸ் ஹேல்ஸ் 37 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வில்லியம்சனும் மனீஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது. வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் கடைசி ஓவர்களை பெங்களூரு அணி சிறப்பாக வீசியது மற்றும் மனீஷ் பாண்டே தேவையில்லாமல் சில ஷாட்களை முயற்சி செய்து பந்துகளை வீணாக்கியது ஆகிய காரணங்களால் ஹைதராபாத் அணியால் இலக்கை எட்டமுடியவில்லை.

வில்லியம்சன் 42 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி, 204 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 

இதன்மூலம் 12 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு கொல்கத்தா, மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இரண்டு இடங்களுக்கு இந்த மூன்று அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.