முகமது அசாருதீன், முகமது கைஃப் வரிசையில் இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஃபீல்டர் ரவீந்திர ஜடேஜா. ஒரு நல்ல ஃபீல்டரின் பங்களிப்பு, ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் 50 ரன்களுக்கு சமம்.

தற்போதைய இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் மிரட்டலான ஃபீல்டர்கள் என்றால் ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவும் தான். தங்களது அசாத்தியமான ஃபீல்டிங்கின் மூலம் ஆட்டத்தில் திருப்புமுனைகளை ஏற்படுத்தக்கூடியவர்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அணியில் இடம்பெற்றிருந்த ஜடேஜா, நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளிலும் ஆடவில்லை. இந்த இரண்டு போட்டிகளிலுமே, குறிப்பாக முதல் போட்டியில் ஃபீல்டிங்கில் இந்திய அணி படு சொதப்பல். முதல் போட்டியில் நிறைய கேட்ச்கள் தவறவிடப்பட்டன. இரண்டாவது போட்டியிலும் முதல் பந்திலேயே மார்டின் கப்டிலுக்கு ரன் அவுட் மிஸ்.

மார்டின் கப்டிலுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும், அதை பயன்படுத்திக் கொள்ளாமல் அவர் 15 ரன்களில் வெளியேறினார். ஒருவேளை அதை பயன்படுத்தி கொண்டிருந்தால், அபாயகரமான கப்டிலின் பேட்டிங் ஆட்டத்தையே மாற்றியிருக்கும். எனவேதான் ஃபீல்டிங் ரொம்ப முக்கியம். 

மவுண்ட் மாங்கனியில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 325 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டிலை முதல் பந்திலேயே பெவிலியனுக்கு அனுப்பியிருக்கலாம். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை மிட் ஆஃப் திசையில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். கப்டில் பாதி பிட்ச் ஓடிவந்தபோதே பந்தை பிடித்த ராயுடு, எளிமையான ரன் அவுட்டை தவறவிட்டார். அதை சரியாக அடித்திருந்தால், முதல் பந்திலேயே கப்டில் காலி. இதுபோன்ற தருணங்கள் தான் ஜடேஜா போன்ற ஃபீல்டரின் அவசியத்தை உணர்த்துகின்றன. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் உஸ்மான் கவாஜாவை ஜடேஜா செய்த ரன் அவுட் அபாரமானது. அதுபோன்ற ரன் அவுட்களும் தோனியின் ஸ்டம்பிங்குகளும் தான் இந்திய அணிக்கு பலமுறை திருப்புமுனைகளை ஏற்படுத்தி வெற்றிகளுக்கு காரணமாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதுபோன்ற ரன் அவுட் வாய்ப்புகளை தவறவிடக்கூடாது.