கடந்த 20 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடுவதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோற்றதும், கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் எழுந்தன. 

ஆனால் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுமே, தங்கள் மீதான விமர்சனங்களுக்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்தார். மேலும், தற்போதைய இந்திய அணி உலகின் எந்த நாட்டிற்கும் சென்று அந்த அணியை வீழ்த்தும் வலிமை வாய்ந்தது என மார்தட்டினார். ஆனால் மீண்டும் நான்காவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது. 

இதற்காகவே காத்திருந்ததுபோல, ரவி சாஸ்திரியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார் சேவாக். பெஸ்ட் டிராவலிங் டீம் என்று வாயில் சொன்னால் போதாது. செயலில் காட்ட வேண்டும். யார் வேண்டுமானாலும் மனதில் நினைப்பதை பேசிவிட்டு போகலாம். ஆனால் சிறந்த அணி என்றால் அதை களத்தில் காட்ட வேண்டும். அதைவிடுத்து ஓய்வறையில் அமர்ந்துகொண்டு சிறந்த அணி என்று வாயில் மட்டுமே சொல்லி கொண்டிருக்க கூடாது. எனவே களத்தில் சிறப்பாக ஆடாமல் வாயில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால், என்றைக்குமே உலகின் சிறந்த அணியாக முடியாது என கடுமையாக விமர்சித்தார் சேவாக். இதேபோலவே கங்குலி, கவாஸ்கர் ஆகிய ஜாம்பவான்களும் இந்திய வீரர்களை விமர்சித்தனர். 

இந்நிலையில், தன் மீதும் அணி மீதுமான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள ரவி சாஸ்திரி, நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து விளையாடினோம். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் எங்களைவிட ஒருபடி மேலாக நன்றாக ஆடினார்கள். எனினும் தற்போதைய இந்திய அணி வெளிநாடுகளில் சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறது. கடந்த 15 முதல் 20ஆண்டுகளில் இந்த அளவுக்குச் சிறப்பான இந்திய அணியை நான் பார்க்கவில்லை. குறுகிய காலத்தில் அதிகமான ரன்களை அடித்திருக்கிறார்கள்.

இந்திய அணி வெற்றி பெறுகிறதா, தோல்வியடைகிறதா என்பதைக் காட்டிலும் வீரர்கள் மனரீதியாகத் தயாராகிறார்களா? வலிமையாக இருக்கிறீர்களா? என்பது அவசியம். அந்த மனவலிமையை தற்போதைய வீரர்கள் பெற்றிருக்கிறார்கள் என்றார்.

தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என்ற கூற்றை மீண்டும் மீண்டும் கூறிவருகிறார் ரவி சாஸ்திரி. ரவி சாஸ்திரியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிவருகிறார் ரவி சாஸ்திரி. ரவி சாஸ்திரின் இந்த வாய்ச்சொல் வீரத்துக்கு ஏற்கனவே சேவாக் சவுக்கடி கொடுத்தும், மீண்டும் அதையே செய்துவருகிறார் ரவி சாஸ்திரி.