பாலிவுட் நடிகை நிம்ரத் கவுருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு காதல் என்று பரவிய தகவல் குறித்து ரவி சாஸ்திரியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு கடுப்பாக பதிலளித்தார். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு இது மிகவும் சோதனைக்காலமாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. அதனால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி வெளிநாடுகளில் திணறிவருகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி என வெளிநாடுகளில் இந்திய அணியின் தோல்விகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

இதன் எதிரொலியாக ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரவி சாஸ்திரியை சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு, அனில் கும்ப்ளேவை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன.

இந்த பிரச்னை ஒருபுறமிருக்க, பாலிவுட் நடிகை நிம்ரத் கவுருக்கும் ரவி சாஸ்திரிக்கும் இடையே காதல் என ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் டேட்டிங் செய்துவருவதாகவும், இருவருக்கும் இடையே காதல் எனவும் தகவல் பரவியது.

இதுதொடர்பாக ரவி சாஸ்திரியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, குவிந்து கிடக்கும் மாட்டுச்சாணம் குறித்து பதில் சொல்ல எதுவுமில்லை. இதற்கெல்லாம் மாட்டுச்சாணம் பதில் சொல்லும் என காட்டமாக தெரிவித்தார். நடிகை நிம்ரத் கவுரும் இது வதந்திதான் என தெரிவித்துள்ளார்.