இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடந்துவருகிறது. 

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே 3-1 என வென்றுவிட்டது. இந்நிலையில், கடைசி போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஹனுமா விஹாரியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

டாஸ் போட்டபிறகு பேசிய விராட் கோலி, அஷ்வினுக்கு காயம் குணமடையாததால் அவருக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, அஷ்வின் குணமடைந்துவிட்டதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். இவை இரண்டில் எது உண்மை என தெரியவில்லை. இருவரும் முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளனர். 

அஷ்வின் இந்த தொடரின் முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் பெரியளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.