அயர்லாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 

ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் இந்தியாவில் டேராடூனில் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. 

கடைசி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் முகமது நபி 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்தார். இவரது அதிரடியால் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 210 ரன்களை குவித்தது. 

211 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் பேட்டிங் வரிசையை வழக்கம்போலவே ரஷீத் கான், தனது சுழலில் சரித்தார். 16வது ஓவரின் கடைசி பந்தில் கெவின் ஓ பிரயனை வீழ்த்திய ரஷீத் கான், தனது அடுத்த ஓவரான 18வது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். கடைசி ஓவரிலும் ஒரு விக்கெட் வீழ்த்த மொத்தமாக 5 விக்கெட்டுகளை ரஷீத் கான் வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் அயர்லாந்து அணி 178 ரன்களை எடுக்க, ஆஃப்கானிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது. 

இந்த போட்டியில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரஷீத் கான், பல சாதனைகளை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக இலங்கை பவுலர் லசித் மலிங்கா, தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மேலும், டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் ஸ்பின் பவுலர் என்ற பெருமையையும் ரஷீத் கான் பெற்றார்.