rashid khan revealed his bowling trick
தனது உடல்மொழியையும் பவுலிங் ஆக்ஷனையும் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாததையே தனது பலமாக கருதுவதாக ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டரான ரஷீத் கான், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். இந்த சீசனில் ஹைதராபாத் அணி இறுதி போட்டி வரை முன்னேறியதற்கு ரஷீத் கானின் பங்களிப்பு அதிகம். லெக் ஸ்பின்னரான ரஷீத் கானின் பந்துவீச்சை தோனி, டிவில்லியர்ஸ், கோலி போன்ற உலகின் தலைசிறந்த முன்னணி வீரர்களால் கூட சமாளிக்க முடியவில்லை.

மிகவும் நேர்த்தியாக பந்துவீசும் ரஷீத் கான் பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். தனது முழுமையான பங்களிப்பை அணிக்கு அளிக்கிறார். களத்தில் முழு ஈடுபாட்டுடன் ஆடுகிறார். ரஷீத் கானை உலகின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர் என சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர்.
கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ரஷீத் கானுக்கு சியட் ரேட்டிங் விருது வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த விழாவில், 2017-18ம் ஆண்டிற்கான சிறந்த டி20 பவுலர் விருது வழங்கப்பட்டது.

விருதை பெற்ற ரஷீத் கான் பேசியபோது, எனது பவுலிங்கில் சிறப்பாக எதுவும் இல்லை. எனது திறமையும் நம்பிக்கையுமே நான் சிறப்பாக ஆடுவதற்கு காரணம். எனது பவுலிங் ஆக்ஷனையும் உடல் மொழியையும் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாது. அதுதான் என்னுடைய பலம் என கருதுகிறேன் என ரஷீத் கான் தெரிவித்தார்.
