ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றி வீரராகவும் உலகின் சிறந்த ஆல்ரவுண்டராகவும் வலம் வருகிறார் ரஷீத் கான்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சிறந்து விளங்குகிறார். ஆஃப்கானிஸ்தான் அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வெற்றிகளை குவித்து கொடுத்திருக்கிறார். ரஷீத் கான் ஆடும் அணி முதலில் பேட்டிங் செய்து எத்தனை ரன்கள் எடுத்தாலும் அந்த ரன்னுக்குள் எதிரணியை சுருட்டி தனது அணியை வெற்றி பெற வைக்கும் திறன் பெற்றவராக திகழ்கிறார். 

நடந்துவரும் ஆசிய கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே மிரட்டி வருகிறார் ரஷீத் கான். லீக் சுற்றில் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்தது. எனினும் கடுமையாக போராடிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. 

ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிகளை குவிப்பதற்கு ரஷீத் கானின் பங்களிப்பு அளப்பரியது. நேற்று முன் தினம்(20ம் தேதி) வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார் ரஷீத் கான். அந்த போட்டி அன்று அவருக்கு பிறந்தநாள்.

இதையடுத்து அவருக்கு பல வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். கிரிக்கெட் ஜாம்பவான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் ரஷீத் கானுக்கு வாழ்த்து தெரிவித்தார். டுவிட்டரில் சச்சின் விடுத்திருந்த வாழ்த்து செய்தியில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஷீத் கான். நீண்ட மற்றும் சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கையை பெற வாழ்த்துக்கள் என சச்சின் டெண்டுல்கர் வாழ்த்தியிருந்தார். 

சச்சின் டெண்டுல்கரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து ரஷீத் இட்ட பதிவில், எல்லா காலத்திற்கும் சிறந்த பேட்ஸ்மேன் சச்சின். உங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி. கிரிக்கெட் சாம்பியன் மற்றும் மேதை நீங்கள். உங்களது வாழ்த்து எனக்கு உத்வேகத்தை அளிக்கிறது என ரஷீத் கான் நன்றிகூறி பதிவிட்டுள்ளார்.