தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான ரஷீத் கான் மிகவும் நேர்த்தியாக ஆடி கிரிக்கெட் ரசிகர்களை வியக்கவைத்துள்ளார். 

ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே தோனி தான் நினைவுக்கு வருவார். யார்க்கர் மற்றும் ஃபுல் லெந்த் பந்துகளை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் தோனி சிக்ஸருக்கு அனுப்புவதை ரசிக்காத கிரிக்கெட் ரசிகரே இருக்க முடியாது.

பொதுவாக போட்டியின் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த யார்க்கர் பந்துகளை பவுலர்கள் வீசுவது வழக்கம். யார்க்கர் மூலம் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த முடியும் என்ற இலக்கணத்தை, ஹெலிகாப்டர் ஷாட் மூலம் உடைத்தவர் தோனி. 

தோனி மட்டுமே அடித்து வந்த ஹெலிகாப்டர் ஷாட்டை இப்போது மற்ற வீரர்களும் நேர்த்தியாக அடிக்கின்றனர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவரும் இளம் வீரர் இஷான் கிஷான், கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மிரட்டினார். 

அதேபோல இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அண்மையில் அயர்லாந்துக்கு எதிராக நடந்த போட்டி ஒன்றில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்தினார். 

தற்போது ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டரான ரஷீத் கானும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை நேர்த்தியாக அடித்துள்ளார். டி10 லீக் தொடரில் மராத்தா அரேபியன்ஸ் அணியில் ஆடிவரும் ரஷீத் கான், பாக்டூன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இர்ஃபான் வீசிய 9வது ஓவரின் கடைசி பந்தை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸருக்கு அனுப்பினார் ரஷீத் கான்.

ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் வெறும் 7 பந்துகளில் 21 ரன்களை குவித்தார் ரஷீத். ரஷீத் கானின் ஹெலிகாப்டர் ஷாட் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அந்த வீடியோவை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்த தோனிக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மராத்தா அரேபியன்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை குவித்தது. மராத்தா அரேபியன்ஸ் நிர்ணயித்த 126 ரன்கள் என்ற இலக்கை 10வது(கடைசி) ஓவரின் இரண்டாவது பந்திலேயே எட்டி பாக்டூன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.