ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரின் ஒரு போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான அதிரடி வீரருமான அஃப்ரிடியை ரஷீத் கான் திணறடித்துள்ளார். 

ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்பின்னர் ரஷீத் கான் உலகின் தலைசிறந்த வீரராக வலம்வருகிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறப்பாக செயல்படும் இவர், சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார்.

இவரது மாயாஜால ஸ்பின் பவுலிங், பேட்ஸ்மேன்களை மிரட்டுகிறது. இவர்  கும்ப்ளே மற்றும் ஷாகித் அஃப்ரிடிதான் தனது முன்மாதிரிகள் என தெரிவித்துள்ளார். அதிகமாக பந்தை சுழற்றாமல் அஃப்ரிடியை போல வேகமாக வீசுவதுதான் தனது உத்தி என ஏற்கனவே தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தனது ரோல் மாடலையே இப்போது மிரளவிட்டுள்ளார் ரஷீத் கான். ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரின் அரையிறுதி போட்டியில் ரஷீத் கான் தலைமையிலான  காபூல் அணியும் ஷேஷாத் தலைமையிலான பாக்டியா பாந்தர்ஸ் அணியும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய காபூல் அணி 20 ஓவர் முடிவில் 192 ரன்களை குவித்தது. இதையடுத்து 193 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பாக்டியா பாந்தர்ஸ் அணி தொடக்கம் முதலே ரன் எடுக்க முடியாமல் திணறியதோடு விக்கெட்டுகளையும் மளமளவென இழந்தது. 15 ஓவரில் வெறும் 102 ரன்களுக்கே அந்த அணி ஆல் அவுட்டானதால் 90 ரன்கள் வித்தியாசத்தில் ரஷீத் கான் தலைமையிலான காபூல் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

இவ்வளவுக்கும் காபூல் அணியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான அஃப்ரிடி இருந்தார். எனினும் அவரால் அந்த ஸ்கோரை எட்டும் அளவிற்கு ஆடமுடியவில்லை. அவர் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். பொதுவாக அதிரடியாக ஆடும் அஃப்ரிடிக்கு பந்தை பேட்டில் தொடுவதையே கடினமாக்கினார் ரஷீத் கான். ரஷீத் கான் வீசிய பந்துகளை பேட்டில் தொடக்கூடிய முடியாமல் திணறினார் அஃப்ரிடி. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

இந்த போட்டியிலும் வழக்கம்போலவே அபாரமாக பந்துவீசிய ரஷீத் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இந்த தொடரின் இறுதி போட்டியில் ரஷீத் கான் தலைமையிலான காபூல் அணியும் முகமது நபி தலைமையிலான பால்க் லெஜண்ட்ஸ் அணியும் மோத உள்ளன.