Asianet News TamilAsianet News Tamil

ஒற்றை வீரரிடம் தோல்வியை தழுவிய கொல்கத்தா!! தனி ஒருவனாக ஹைதராபாத்தை தூக்கி நிறுத்திய ரஷீத் கான்

rashid khan defeats kkr
rashid khan defeats kkr
Author
First Published May 26, 2018, 10:08 AM IST


இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐபிஎல் 11வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. முதல் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

முதல் தகுதி சுற்று போட்டியில் தோற்ற ஹைதராபாத், எலிமினேட்டர் போட்டியில் வென்ற கொல்கத்தாவுடன் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மோதியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு 7 மணிக்கு போட்டி தொடங்கியது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சஹா ஆகியோர் தொடக்கத்தில் தடுமாறினாலும் போகப்போக ரன்களை சேர்த்தனர். 34 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவின் சுழலில் வீழ்ந்தார் ஷிகர் தவான். அதே ஓவரில் வில்லியம்சனையும் வீழ்த்தி மிரட்டினார் குல்தீப். அதன்பிறகு சஹா 35, ஷாகிப் அல் ஹாசன் 28, தீபக் ஹூடா 19, பிராத்வைட் 8, யூசுப் பதான் 3 என சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

18வது ஓவரின் கடைசி பந்தில் களமிறங்கிய ரஷீத் கான், முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். ஷிவம் மாவி வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார் ரஷீத் கான். கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த புவனேஷ்வர் குமார், இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். மூன்றாவது பந்தில் பவுண்டரி, நான்காவது பந்தில் சிக்ஸர், ஐந்தாவது பந்தில் 2 ரன்கள், கடைசி பந்தில் சிக்ஸர் என கடைசி ஓவரை அடித்து நொறுக்கினார் ரஷீத்.

வெறும் 10 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார் ரஷீத் கான். ரஷீத் கானின் அதிரடியால் கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்ததோடு, ஹைதராபாத் அணியின் ஸ்கோரும் 174 ஆக உயர்ந்தது. 

175 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

சுனில் நரைன் 26 ரன்களிலும் நிதிஷ் ராணா 22 ரன்களிலும் அவுட்டாகினர். உத்தப்பாவை திணறடித்து 2 ரன்களில் போல்டாக்கி வெளியேற்றினார் ரஷீத் கான். தினேஷ் கார்த்திக் 8 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடிவந்த கிறிஸ் லின்னை 48 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் ரஷீத். 

அதன்பிறகு ஆண்ட்ரே ரசலை நம்பியிருந்தது கொல்கத்தா. அந்த நம்பிக்கையையும் ரஷீத் கான் தான் தகர்த்தார். ரசல் விக்கெட்டையும் வீழ்த்தினார். இறுதியில் ஷுப்மன் கில் போராடினார். ஆனால் இலக்கை எட்ட முடியவில்லை. இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

ஹைதராபாத்தின் ஒட்டுமொத்த வெற்றியும் ரஷீத் கானையே சாரும் எனும் அளவிற்கு ஆடினார் ரஷீத். அந்த அணியே 165 ரன்களைத்தான் எதிர்பார்த்திருந்திருக்கும். அதுவும் விக்கெட்டுகள் வீழ்ச்சியால், 160 வந்தால் போதும் என்றுதான் இருந்திருக்கும். ஆனால் கடைசி நேர அதிரடியால், அணியின் ஸ்கோரை 174 ஆக உயர்த்தினார் ரஷீத் கான்.

அதேபோல், கொல்கத்தா அணியின் உத்தப்பா விக்கெட்டை வீழ்த்திய ரஷீத் கான், ஒவ்வொரு கட்டத்திலும் கொல்கத்தா அணியின் அடுத்தடுத்த நம்பிக்கையாக திகழ்ந்த கிறிஸ் லின் மற்றும் ரசல் ஆகியோரை விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தாவை நிலைகுலைய செய்தார். அதுமட்டுமல்லாமல், நிதிஷ் ராணாவின் ரன் அவுட், ஷுப்மன் கில் மற்றும் சிவம் மாவியின் இரண்டு அற்புதமான கேட்ச்சுகள் என கொல்கத்தாவின் தோல்வியடைய செய்தது ரஷீத் கான் தான்.

ரஷீத் கான் என்ற ஒற்றை வீரரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தாவை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது. ரஷீத் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios