ramachandra guha revealed kohli domination in bcci

உச்சநீமன்றம் நியமித்த பிசிசிஐ நிர்வாக குழு உறுப்பினராக இருந்த ராமச்சந்திர குஹா, இந்திய கிரிக்கெட்டிலும் கிரிக்கெட் வாரியத்திலும் கேப்டன் கோலியின் ஆதிக்கம் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள ராமச்சந்திர குஹா, பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவில் நான் பணியாற்றிய அந்த 4 மாதங்களில் கோலியின் ஆதிக்கச் சுயம் எந்த அளவுக்கு விரிவும் ஆழமும் கொண்டது என்பதை உணர்ந்தேன். பிரதமர் நரேந்திர மோடியை மத்திய அமைச்சர்கள் வழிபடுவதை விட அதிகமாக கோலியை பிசிசிஐ அதிகாரிகள் வழிபடுகின்றனர்.

இந்திய அணியின் எதிர்காலப் பயணத்திட்டம், தேசிய கிரிக்கெட் அகாடமி மேலாண்மை ஆகியவற்றில் கூட கோலியின் அதிகார எல்லை நீண்டுள்ளது. இவையெல்லாம் கேப்டனின் வரம்புக்குள் இருப்பதல்ல. 

தற்போதைய அணி தேர்வாளர்கள் முந்தைய தேர்வாளர்கள் போல் கிரிக்கெட் ஆட்டத்தில் சாதித்தவர்கள் அல்லர். ரவி சாஸ்திரி நிறைய ஆடியுள்ளார். ஆனால் அவர் உண்மையான கிரேட் கிடையாது. அதனால் ரவி சாஸ்திரி கேப்டனுக்கு அடிபணிவது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்றைய இந்திய கிரிக்கெட்டில் தேர்வுக்குழுவினர், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், அனைவரும் கோலியின் முன் குள்ளர்களாக காட்சியளிக்கின்றனர். இந்த நிலை கண்டிப்பாக மாறவேண்டும். 

அணி தேர்வாளர்கள், ஏற்கனவே சாதித்த கிரிக்கெட் வீரர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பெரிய கிரிக்கெட் வீரர்களாக இல்லாவிடினும் கேப்டனின் அதிகாரத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் அதிகாரமும், ஆசையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியாளரும் தேவைப்படும் போது கேப்டனின் அதிகார வரம்பை நிர்ணயிப்பவராக இருக்க வேண்டும். உதாரணமாக அனில் கும்ப்ளே தர்மசாலாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் யாதவ்வை தேர்வு செய்தார். அது இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. 

பிசிசிஐ நிர்வாகிகள் இந்திய அணி வெளிநாடுகளில் நன்றாக ஆடுவதை உறுதி செய்யும் விதமாக கிரிக்கெட் காலண்டரை உருவாக்க வேண்டும். அதை விடுத்து தங்கள் ஈகோக்களையும் பர்ஸையும் மட்டுமே குறிவைத்து செயல்படுதல் கூடாது. தென் ஆப்பிரிக்க தொடர் 4 டெஸ்ட் போட்டிகளாக இருந்திருக்க வேண்டும், ஆனால் பிசிசிஐக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கும் இருந்து வரும் மோதாலல் அது நடைபெறவில்லை.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற சவாலான இடங்களில் இந்திய அணி போட்டிகளையும் தொடர்களையும் வென்றால்தான் உண்மையில் இந்த அணி கிரேட் அணியாக இருக்க முடியும். கேப்டனின் அகந்தையும் அதிகாரமும் அவரது சொந்த வெற்றிக்கு வேண்டுமானால் கைகொடுக்கலாம். ஆனால் அது அணியின் வெற்றியாக மாற வேண்டுமானால் அந்த அதிகாரம், அகந்தை கொஞ்சம் தட்டி வைக்கப்படுவது அவசியம் என ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.