ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் கோவாவில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துக்கொள்ள விரும்பாத வீரர்களின் பட்டியலை வெளியிட்டுவருகின்றன. 

மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப்  ஆகிய அணிகள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை பார்த்தோம். இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்கள் குறித்து பார்ப்போம்.

இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு 2017 சீசனில் மீண்டும் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால் அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையில் இருந்ததால் கடந்த சீசனில் ஆடவில்லை. அதனால் கேப்டன் பொறுப்பு ரஹானேவிடம் சென்றது. ரஹானே கேப்டனாக சிறப்பாகத்தான் செயல்பட்டார். அடுத்த சீசனுக்கு முன்னதாக ஸ்டீவ் ஸ்மித்தின் தடைக்காலம் முடிந்துவிடும் என்பதால் அடுத்த சீசனில் ஸ்மித் ஆடுவதில் சிக்கல் ஏதுமில்லை. எனவே ஸ்மித்தை தக்கவைத்துள்ளது ராஜஸ்தான் அணி.

ரஹானே, கிருஷ்ணப்பா கௌதம், குல்கர்னி, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோரையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்துள்ளது. 

2017 ஐபிஎல் சீசனில் தொடர் நாயகன் விருதை வென்ற பென் ஸ்டோக்ஸை பேரார்வத்துடன் ரூ.12.5 கோடிக்கு எடுத்தது ராஜஸ்தான் அணி. ஆனால் அவரோ சீசன் முழுவதும் ஆடி 196 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி ஏமாற்றினார். எனினும் அவர் சர்வதேச போட்டிகளில் தற்போது நல்ல ஃபார்மில் ஆடிவருவதால் அவரை தக்கவைத்துள்ளது ராஜஸ்தான் அணி. கடந்த சீசனில் சரியாக ஆடாவிட்டாலும் பென் ஸ்டோக்ஸ் மீதான நம்பிக்கையில் அவரை மீண்டும் தக்கவைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். 

அதேநேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்ட ஜெய்தேவ் உனாத்கத்தை விடுவித்துள்ளது ராஜஸ்தான் அணி. கடந்த சீசனில் ரூ.11.5 கோடிக்கு உனாத்கத்தை எடுத்தது ராஜஸ்தான் அணி. 15 போட்டிகளில் ஆடி சராசரியாக 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து வெறும் 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார் உனாத்கத். கடந்த சீசனில் ஏமாற்றிய உனாத்கத்தை விடுவித்துள்ளது. 

ராஜஸ்தான் அணி ஆர்வத்துடன் ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலியாவின் டார்ஷி ஷார்ட், தென்னாப்பிரிக்காவின் கிளாசன் ஆகியோரையும் விடுவித்துள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்த வீரர்கள்:

அஜிங்கியா ரஹானே, கிருஷ்ணப்பா கௌதம், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் கோபால், ஆர்யமான் பிர்லா, மிதுன், பிரஷாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி, குல்கர்னி, மஹிபால் லாம்ரோர். 

ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவித்த வீரர்கள்:

டார்ஷி ஷார்ட், பென் லாஃப்லின், கிளாசன், டேன் பேட்டர்சன், ஜாகிர் கான், துஷ்மந்தா சமீரா, அனுரீத் சிங், அங்கித் ஷர்மா, ஜடீன் சக்ஸேனா.