rajasthan royals defeats rcb and retain play off chance

பெங்களூரு அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.

ஐபிஎல் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. 53வது லீக் போட்டியில் பெங்களூருவும் ராஜஸ்தானும் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் முக்கியமான போட்டியில் மோதின.

ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர் ராகுல் திரிபாதி அதிரடியாக ஆடி 80 ரன்களை குவித்தார். ரஹானே 33, கிளாசன் 32 ரன்கள் எடுத்தனர். ஆர்ச்சர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினர். கடைசி நேரத்தில் களமிறங்கிய கிருஷ்ணப்பா கௌதம், 5 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 80 ரன்களை குவித்தார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்தது.

165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் பார்த்திவ் படேல் மற்றும் டிவில்லியர்ஸை தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. கோலி 4 ரன்களில் வெளியேறினார். பார்த்திவ் படேல் 33 ரன்களும் டிவில்லியர்ஸ் 53 ரன்களும் அடித்தனர். அதன்பிறகு களமிறங்கிய மோயின் அலி, மந்தீப் சிங், கோலின் டி கிராண்ட்ஹோம், சர்ஃபராஸ் கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். அதனால் 19.2 ஓவருக்கே 134 ரன்களுக்கே பெங்களூரு அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து ராஜஸ்தான் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி 4வது இடத்தை பிடித்து, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது. ஆனால் ராஜஸ்தான் அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெறுவது, மும்பை அணியின் இன்றைய வெற்றி தோல்வியை பொறுத்தே அமையும். டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட் அடிப்படையில் மும்பை அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெறும்.