(ஐபிஎல்) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் விலகியதால் இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானேவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணியில் ஸ்மித்துக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பந்தின் தன்மையை மாற்றுவதற்கு ஆஸ்திரேலிய அணியின் பேன்கிராஃப்ட் முயன்றது விடியோவில் பதிவாகியிருந்தது.

இந்தச் செயலுக்கு கேப்டன் ஸ்மித்தும் உடந்தையாக இருந்ததை ஒப்புக் கொண்டார். அத்துடன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.

இந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் நேற்று தெரிவித்தது.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில் எந்தவித தடங்கலும் இன்றி அணி அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். ஸ்டீவ் ஸ்மித்தின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம்

பிசிசிஐ அதிகாரிகளுக்கும், இந்திய ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். ரஹானே, ராஜஸ்தான் அணியை நன்கு அறிவார். அவரது தலைமையில் எங்களது அணி இந்த முறை களமிறங்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.