ஐபிஎல் 11வது சீசனில் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பல வீரர்கள் அடுத்த சீசனில் அவர்கள் இருந்த அணிகளிலிருந்து தூக்கி எறியப்பட உள்ளனர்.

ஐபிஎல் 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால், ஐபிஎல் சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது. அதனால் வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடக்கும் வீரர்கள் ஏலம் இம்முறை டிசம்பர் மாதம் கோவாவில் நடக்க உள்ளது. 

அதனால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பாத வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வீரர்கள் பரிமாற்றத்தில் ஈடுபட்டன. தாங்கள் தக்கவைக்க விரும்பாத வீரர்களின் பட்டியலையும் சமர்ப்பித்தது. 

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் கடந்த முறை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்து ஏமாந்த சில வீரர்களை கழட்டிவிட உள்ளனர். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.12.5 கோடிக்கு இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸையும் ரூ.11.5 கோடிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கத்தையும் எடுத்தது. இருவருமே அந்த அணிக்கு ஏமாற்றமளித்தனர். 2017 ஐபிஎல் சீசனில் தொடர் நாயகன் விருதை வென்ற பென் ஸ்டோக்ஸை பேரார்வத்துடன் ரூ.12.5 கோடிக்கு எடுத்தது ராஜஸ்தான் அணி. ஆனால் அவரோ சீசன் முழுவதும் ஆடி 196 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி ஏமாற்றினார். அதனால் அவரை அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுத்த ராஜஸ்தான் அணி ஏமாந்தது. இவராது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு இருந்தது உனாத்கத்தின் ஆட்டம். 15 போட்டிகளில் ஆடி சராசரியாக 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து வெறும் 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார் உனாத்கத். எனவே இவர்கள் இருவரையும் விடுவிக்கும் முனைப்பில் உள்ளது ராஜஸ்தான் அணி. இவர்கள் இருவரையும் விடுவித்தாலே அந்த அணிக்கு ரூ.24 கோடி கையிருப்பில் இருக்கும். அதை வைத்து பல வீரர்களை ஏலத்தில் எடுத்துவிடலாம். 

அதேபோல சன்ரைசர்ஸ் அணி, பஞ்சாப் அணியுடன் கடும் போட்டியிட்டு ரூ.11 கோடிக்கு மனீஷ் பாண்டேவை ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஏன் தான் இவரை இவ்வளவு தொகைக்கு எடுத்தோமோ? என்று அந்த அணி ஃபீல் பண்ணும் அளவிற்கு மொக்கையாக ஆடினார் பாண்டே. கடந்த சீசன் முழுவதும் சேர்த்தே வெறும் 284 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே மனீஷ் பாண்டேவை கண்டிப்பாக கழட்டிவிடும் முனைப்பில் உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.