rajasthan retain play off chance
சென்னை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது ராஜஸ்தான் அணி.
ஐபிஎல் 43வது லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டின் செய்தது. நல்ல ஃபார்மில் இருக்கும் அம்பாதி ராயுடு 12 ரன்களில் வெளியேறினார். ஷேன் வாட்சன், 39 ரன்கள் அடித்து அவுட்டானார். அரைசதம் கடந்த சுரேஷ் ரெய்னா, 53 ரன்களில் வெளியேற, தோனி 33 ரன்கள் மற்றும் பில்லிங்ஸ் 27 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பட்லர், இறுதி வரை ஆட்டமிழக்காமல் சென்னை அணியை வீழ்த்தினார். 19.5 ஓவரில் இலக்கை எட்டி ராஜஸ்தான் வெற்றி பெற்றது. 95 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை ராஜஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. 18 புள்ளிகளை பெற்றுள்ள ஹைதராபாத் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. சென்னை அணியும் பஞ்சாப் அணியும் பிளே ஆஃபிற்கு தகுதிபெறுவதற்கு அருகே சென்றுவிட்டனர். டெல்லியும் பெங்களூருவும் வாய்ப்பை இழந்துவிட்டன.
மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கு இடையேயும் தான் கடும் போட்டி நிலவுகிறது. மூன்று அணிகளுமே 11 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. மும்பை அணி, மற்ற இரு அணிகளை காட்டிலும் நல்ல ரன்ரேட்டை பெற்றுள்ளதால், புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.
பிளே ஆஃபிற்கு தகுதி பெற போராடும் ராஜஸ்தானும் மும்பையும் நாளை மோதுகின்றன. இந்த போட்டியும் மிகவும் முக்கியமான போட்டி. இரு அணிகளுமே சம புள்ளிகளை பெற்றுள்ளது. கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு அணிகளும் நாளை பலப்பரீட்சை செய்கின்றன. நாளைய போட்டியில் தோற்கும் அணி, பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். அதேபோல், வெற்றி கட்டாயத்தில் உள்ள கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வலுவான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இனிவரும் ஒவ்வொரு போட்டியும் மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு மிகவும் முக்கியம்.
அதனால் இனிவரும் போட்டிகள் அனைத்தும் கூடுதல் சுவாரஸ்யத்துடனும் விறுவிறுப்பாகவும் அமையும். ஐபிஎல் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
