raina wife happy about his performance in last twenty over series

கடந்த ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த சுரேஷ் ரெய்னா, கடந்த ஆண்டின் இறுதியில் யோ-யோ டெஸ்டில் தேர்ந்தார். அதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடம்பெறாத ரெய்னாவுக்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்தினார் என்றே கூறவேண்டும். அதுவும் நேற்றைய கடைசி போட்டியில் அதிரடியாக 43 ரன்கள் விளாசியதுடன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதுதொடர்பாக பேசிய ரெய்னா, மீண்டும் நான் அணிக்கு திரும்பி இருக்கும் இந்த தருணம் மிகச் சிறப்பானது. இந்த தொடருக்கு பின் இலங்கைக்கு எதிரான டி20 தொடர் , ஐபிஎல் போட்டித் தொடர் உள்ளிட்ட அதிகமான போட்டிகளில் விளையாட இருக்கிறேன்.

ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை, 5-வது பேட்ஸ்மனாக களமிறங்கி சிறப்பாகச் செயல்பட்டுள்ளேன், இனியும் செயல்படுவேன். எனது திறமையை மீண்டும் நிரூபிக்க இரு போட்டிகள் போதும். அதன்பின், மீண்டும் ஒருநாள் தொடருக்கான அணியில் விரைவில் இடம் பிடிப்பேன் என ரெய்னா நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

ரெய்னா மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடிய நிலையில், ஆட்டநாயகன் விருதுடன் ரெய்னா இருக்கும் புகைப்படத்தை அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரெய்னாவின் மனைவி பிரியங்கா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனது முழு மகிழ்ச்சியுடன் இருக்கும்போது கண்ணீர் வருகிறது என நெகிழ்ந்துள்ளார்.