கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயம் ஏற்பட்டதால், அடுத்த இரண்டு போட்டிகளில் சுரேஷ் ரெய்னா விளையாடமாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஐபிஎல் 11வது சீசன் நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி களமிறங்கியதால், சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த சென்னை அணியின் ரசிகர்கள் அடுத்தடுத்த ஏமாற்றங்களை சந்தித்துவருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழர்கள் ஒன்றிணைந்து போராடிவரும் வேளையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக்கூடாது என்று எதிர்ப்புகள் வலுத்ததால், சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் புனேவிற்கு மாற்றப்பட்டன.

இதுவே சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், ரெய்னாவும் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடாதது, ரசிகர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

மும்பைக்கு எதிரான முதல் போட்டியின்போது காலில் காயம் ஏற்பட்டதால், கேதர் ஜாதவ் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கின்போது, சுரேஷ் ரெய்னாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு போட்டியில் தொடர்ந்து விளையாடினாலும் நிற்க முடியாமல், ஓடமுடியாமல் திணறினார். உடனே அவுட்டும் ஆனார். அதன்பிறகு அவரை பரிசோதித்த பிசியோதெரபிஸ்ட், ரெய்னா ஒருவாரம் ஓய்வெடுக்க வேண்டும் என கூறியதால், அடுத்த இரண்டு போட்டிகளில் ரெய்னா விளையாட மாட்டார்.

வரும் 15ம் தேதி நடக்க இருக்கும் பஞ்சாபுக்கு எதிரான போட்டியிலும் 20ம் தேதி நடக்க இருக்கும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ரெய்னா விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கேதர் ஜாதவ் விளையாடாத நிலையில், தற்போது ரெய்னாவும் இரண்டு போட்டிகளில் ஆடாதது, சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.