rahul speaks about chris gayle

இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வெல்லாத மூன்று அணிகளில் பஞ்சாப்பும் ஒன்று. இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் ஆடிவருகிறது.

ஐபிஎல் ஏலத்தின்போதே சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற தீவிரம் பஞ்சாப் அணியிடம் இருந்ததை காண முடிந்தது. சேவாக் ஆலோசகராக உள்ள பஞ்சாப் அணி, கிறிஸ் கெய்ல், லேகேஷ் ராகுல், யுவராஜ் சிங், கருண் நாயர், அஸ்வின், மார்கஸ் ஸ்டோய்னிஸ் போன்ற சிறந்த வீரர்களை தேர்வு செய்தது.

பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில், அஸ்வினை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அஸ்வினும் சிறப்பாக கேப்டன்சி பணியை செய்துவருகிறார். இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள பஞ்சாப் அணி 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. பேட்டிங்கில் கிறிஸ் கெய்லும் லோகேஷ் ராகுலும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுக்கின்றனர். அனைத்து போட்டிகளிலுமே ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்கின்றனர். அதிரடியாக தொடங்கி நடு வரிசை பேட்ஸ்மேன்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றனர்.

இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள கெய்ல் 302 ரன்களும், 9 போட்டிகளில் ராகுல் 292 ரன்களும் குவித்துள்ளனர். இதுவரையில் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் கெய்ல் மற்றும் ராகுல் முறையே 9 மற்றும் 10 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.

வெற்றிகரமான ஜோடியாக கெய்ல்-ராகுல் இணை உள்ளது. இந்நிலையில், கெய்ல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல், கெய்லுடன் தொடக்க வீரராக களமிறங்குவது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. கெய்லுடன் களமிறங்குவதால், எதிரணி பவுலர்கள் அவரை வீழ்த்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். அதனால் அதை பயன்படுத்தி நான் எனது பாணியில் அதிரடியாக ஆட வாய்ப்பாக அமைகிறது என தெரிவித்தார்.

பெங்களூரு அணியிலும் கெய்லுடன் ஆடியுள்ளேன். அவர் ஒரு சிறந்த மனிதர். எப்போதுமே முகத்தில் புன்னகை தவழ கிரீசில் நிற்பார். நெருக்கடியான தருணங்களில் கூட ரசிகர்களின் ஜனரஞ்சகத்திற்காக ஆடக்கூடியவர் என கெய்லை புகழ்ந்தார்.