Rahul plays second Test match - Captain Kohli
இன்று நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் களமிறங்குவார் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள், மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது இந்தியா. அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்திய கேப்டன் கோலி செய்தியாளர்களிடம் கூறியது:
“தன்னுடைய இடம் பாதுகாப்பாக உள்ளதாக கே.எல். ராகுல் உணரவேண்டும். வெளியே நடக்கும் விஷயங்களால் அது மாறக்கூடாது. அணிக்குத் தேவைப்படும்போது ராகுல் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவரைப் போன்றவருக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். நன்றாக விளையாடி வந்தாலும் காயங்களால் வெளியேற வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.
கடந்த டெஸ்டில் விளையாடிய தொடக்க வீரர்களில் ஒருவர் ராகுலுக்காகத் தன் இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக நிறைய சாதித்துள்ளார் ராகுல். எனவே அவருடைய இடம் மீண்டும் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடுவார். அணியின் கூட்டம் முடிந்தபிறகு இதுகுறித்து தெளிவான முடிவை அறிவிக்க முடியும்.
அதேசமயம், இன்னொரு தொடக்க வீரர் யார் என்றால், கடந்த டெஸ்ட் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி அணிக்கு உதவிய வீரருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். யாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையோ அவர் நிச்சயம் நிலைமையைப் புரிந்துகொள்வார். தொழில்முறையில் விளையாடும் வீரர்கள் அணியின் நலனுக்காக இந்தச் சூழலை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்” என்று கூறினார்.
