ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் ராகுல் டிராவிட் அதிரடியான கருத்துகளை தெரிவித்துள்ளார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் எதிரொலியாக இருவரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து உடனடியாக நாடு திரும்பினர். 

இதையடுத்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக விஜய் சங்கரும் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில்லும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

ஹர்திக் பாண்டியா - ராகுல் விவகாரத்தை விசாரிக்க விசாரணை அதிகாரியை நியமிக்கக்கோரி பிசிசிஐ நிர்வாகக்குழு தாக்கல் செய்த மனுவை வரும் பிப்ரவரி 5ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. இதற்கிடையே ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் மீதான இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து தொடரில் கலந்துகொள்வதற்காக அங்கு செல்கிறார். ராகுல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் ஆடுகிறார். 

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா - ராகுல் விவகாரம் குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்திற்கு ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கான பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம், இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது இளம் வயதிலேயே வீரர்களுக்கு கிடைக்கும் பணம் மற்றும் புகழ் ஆகியவைதான் இதுபோன்ற ஒழுக்கக்கேடான பேச்சுக்கு காரணமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட், இவர்கள் இவ்வாறு பேசியதற்கு இளம் வயதிலேயே கிடைத்த பணம் மற்றும் புகழ்தான் காரணம் என்று கூற முடியாது. பெற்றோரின் வளர்ப்புதான் முக்கிய காரணம். பணக்கார வீட்டில் பிறந்தவர்கள்தான் இப்படி இருப்பார்கள் என்று கூற முடியாது. பொருளாதார ரீதியான வேறுபாடுகளை கடந்து, குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்க்கும்போது அதிகமான உரிமைகளை எடுத்துக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் குழந்தை பருவத்திலேயே அவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் ஏமாற்றுத்தனங்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல், உடனடியாக தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும். ஒரு வீரரை உருவாக்குவதில் பயிற்சியாளரைப்போல பெற்றோரின் பங்களிப்பும் முக்கியம். ஏனென்றால் அவர்கள் சிறு வயதிலிருந்தே பெற்றோரிடம்தான் வளருகிறார்கள். அதேபோல அணியில் உள்ள மூத்த வீரர்களும் இளம் வீரர்களுக்கு முன்னோடியாக இருந்து நல்ல வழியில் வழிநடத்த வேண்டும். தவறுகள் நடப்பது சகஜம்தான். ஆனால் அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அதேபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதுதான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.